நீல நாக்கு நோயும் ஏட்டிக்குப்
போட்டி ஏகாம்பரமும்
(Bluetongue Disease in Sheep)
(Bluetongue Disease in Sheep)
ரா.கோபி, ந.விமல் ராஜ்குமார்,
பெரு.மதியழகன் மற்றும் பொ.திலகர்
கால்நடை விரிவாக்கக் கல்வித்
துறை,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
சென்னை-7
காட்சி
– 1
(பங்கு பெறுவோர்:
முண்டாசு முனுசாமி, ரவுசு ராக்கம்மாள்,
ஏட்டிக்குப்போட்டி
ஏகாம்பரம்)
(முண்டாசு முனுசாமியும், ரவுசு ராக்கம்மாவும் தங்களுடைய
ஆடுகள் மற்றும் குட்டிகளை ஓட்டிக்கொண்டு செல்கின்றனர். அப்பொழுது)
முண்டாசு
முனுசாமி : கொஞ்சம் வேகமா நட தாயி, நாம சட்டு
புட்டுன்னு மாட்டாஸ்பத்திரிக்குப் போவணும்.
ரவுசு
ராக்கம்மா : நடக்க முடியல மாமா கொஞ்சம்
மெதுவா போலாம்.
முண்டாசு
முனுசாமி : காலங்காத்தால கம்மஞ்சோற கொஞ்சம் குறைச்சலா
குடின்னா கேட்கறியா தாயி.
ரவுசு ராக்கம்மா : நான் என்னய சொல்லல மாமா,
நம்ம ஆட்டுப் புள்ளைங்களால நடக்க முடியலன்னு சொன்னேன்.
முண்டாசு முனுசாமி : ஓ! அப்படியா தாயி.
ரவுசு ராக்கம்மா : நம்ம கண்ணாலம் ஆனதிலிருந்து
நீ என்னைக்கு மாமா நான் சொன்னதை முழுசா கேட்டிருக்க….? சரி மாமா. நேத்து மாட்டாஸ்பத்திரிக்கு
நம்ம செவலை குட்டி சாப்பிடலன்னு ஓட்டிட்டு போனியே அப்ப நம்ம டாக்டரு ஏதாச்சும் சொன்னாரா.
இம்புட்டு வேகமா நடக்குறியே மாமா?
முண்டாசு முனுசாமி : ஆமா தாயி நம்ம செவலைப் பயலுக்கு இந்தக்
கருப்பனுக்கு எல்லாம் நீல நாக்கு நோய் தடுப்பூசி போடனும் அப்படின்னு சொன்னாரு.
(அப்பொழுது
ஏட்டிக்குப் போட்டி ஏகாம்பரம் இவர்களைப் பார்க்கிறார்)
ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம் :
ஏம்பா முனுசாமி எங்க ரெண்டு பேரும் ஜோடியா கிளம்பிட்டீங்க? என்ன சேதி? டவுன்ல சந்தைல ஆட்டெல்லாம் விக்கிறதுக்கு
போறீங்களா?
ரவுசு ராக்கம்மா : ஏகாம்பரண்ணே உன் வாயில கொள்ளி
வைக்க! உன் கருநாக்குல நல்ல வார்த்தையே வராதா?
ஏ.போ.
ஏகாம்பரம் : சரி சரி விடுங்க. ஏன் இவ்வளவு வேகமா போறீங்க? என்னாச்சு. இந்தக் காபி
தண்ணிய நாக்குல ருசி பார்த்துட்டு போறது.
முண்டாசு முனுசாமி : இல்லப்பா ஏகாம்பரம். பேச ஆரம்பிச்சா நேரமாயிடும். மாட்டாஸ்பத்திரியில் நீல நாக்கு நோய்க்குத் தடுப்பூசி
போடுறாங்களாம். அதான் எங்க ஆட்டு புள்ளைங்களுக்குத்
தடுப்பூசி போடலாம்னு போய்ட்டிருக்கோம். ஏம்பா
ஏகா நீயும் போன மாசம் சந்தையில ஆடு வாங்கினதான?
ஏ.போ.
ஏகாம்பரம் : ஆமா அந்த நோய் பேரு என்ன சொன்ன
முண்டாசு முனுசாமி : நீல நாக்கு நோய்
ஏ.போ.
ஏகாம்பரம் : போப்பா முனுசாமி. நாங்கல்லாம் கருநாக்குகாரங்க. எங்க ஆட்டுக்கெல்லாம் எந்த கலரு நாக்கு நோயும் வராது. போப்பா போ… போயி வேலையப் பாரு.
முண்டாசு முனுசாமி : ஏம்பா ஏகாம்பரம் எப்பபாரு ஏட்டிக்கு
போட்டி பேசாம போய் கூட்டிக்கிட்டு வா போலாம்.
(முனுசாமியும்,
ராக்கம்மாவும் அங்கிருந்து மாட்டாஸ்பத்திரிக்குச் செல்ல தொடங்கினர்)
காட்சி – 2
இடம்: கால்நடை
மருத்துவமனை
(பங்கு பெறுவோர்: கால்நடை மருத்துவர், முண்டாசு முனுசாமி,
ரவுசு ராக்கம்மாள்)
மருத்துவர் : ஏம்பா முண்டாசுக்காரரே நேற்று ஒரு செவலை குட்டி
சரியா சாப்பிடலன்னு கொண்டு வந்தவர் தான நீங்க இப்ப நல்லா மேயுதப்பா.
முண்டாசு
முனுசாமி : ஆமாங்கய்யா. இப்ப நல்லா மேயுதுங்கய்யா.
மருத்துவர் : ஏம்பா உங்க பேரு என்ன?
முண்டாசு
முனுசாமி : ஐயா என் பேரு முனுசாமி. இது என் பொண்சாதி ராக்கம்மா.
மருத்துவர் : நல்லதுப்பா. 3 மாதத்துக்கு மேல இருக்குற எல்லா ஆடுகளுக்கும்
தடுப்பூசி போட்டுக்கப்பா.
முண்டாசு
முனுசாமி: சரிங்கய்யா. அதுக்கு முன்னாடி எனக்கு சில சந்தேகங்கள் இருக்குதய்யா.
மருத்துவர் : சரிப்பா.
ஒவ்வொரு சந்தேகமா கேளுப்பா.
முண்டாசு
முனுசாமி : இந்த நோய்க்கு ஏன் சார் நீல நாக்கு
நோய்னு பேரு?
மருத்துவர் : இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளோட நாக்கு
எல்லாம் தடிச்சி நீல நிறமா மாறிடும். ஆதனால
அந்த நோய்க்கு நீல நாக்கு நோய்னு பேரு. சுரி…அடுத்த என்ன சந்தேகம்?
முண்டாசு
முனுசாமி : இந்த நோய் எதனால வருதுங்கய்யா?
மருத்துவர் : நீல நாக்கு நோயானது ஓரு நச்சுரியால வருதுப்பா.
ரவுசு ராக்கம்மா : எனக்கு ஒன்னுமே புரியலைங்க
ஐயா. கண்ண கட்டி காட்டில உட்ட மாதிரி இருக்கு. கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க ஐயா. நாங்கலாம பள்ளிக்கூடம் போகவதவங்கய்யா.
மருத்துவர் : அப்படியாம்மா! சரிம்மா உனக்கு புரியற மாதிரி
சொல்றேன் கேளு. “நீல நாக்கு நோயானது ஒரு நச்சுயிரியினால வருது. இந்த நோய் வெள்ளாடுகளை விட செம்மறியாடுகளைத்தான்
தீவிரமாக தாக்கும். நோய் வந்த ஆட்ட ‘கூலிகாய்ட்ஸ்’
கொசு கடிக்கும் போது, நோய் வந்த ஆட்டுல இருக்கிற நச்சு கிருமி, கொசு உடம்பிற்குள்ள
போயிடும். அதுக்கப்புறமா அந்தக் கொசு, மத்த நல்லாயிருக்கிற ஆடுகளை கடிக்கும் போது அந்தக்
கொசு மூலம் நீல நாக்கு நோய் அந்த ஆடுகளுக்குப் பரவும்”. சரியாம்மா புரியுதா?
ரவுசு ராக்கம்மா : புரியுதுங்கய்யா. இன்னொரு சந்தேகம் இருக்குங்கய்யா. நோய் வந்த ஆடு மற்ற ஆடுகளோடு மோதினால் இந்த நோய்
பரவுமாங்கய்யா.
மருத்துவர் : பரவாதும்மா. இந்த நோய் கிருமி தீவனம் மூலமாகவோ,
ஆடுங்க ஒன்னுக்கொன்னு உரசுவது மூலமாகவோ பரவாது.
மழை காலத்துல இந்த வகை கொசு அதிகமாக உற்பத்தியாவதால அக்டோபர், நவம்பர்; டிசம்பர் மாதங்கள்ல இந்த நோய்; ஆடுகளை அதிகமாக
தாக்கும்.
முண்டாசு
முனுசாமி : புரியுதுங்கய்யா. அதனால தான் மழைக்காலத்துக்கு முன்னாடி இந்தத் தடுப்பூசிய
போடுறாங்களா?
மருத்துவர் : முனுசாமி, அருமையா சரியா சொன்னீங்க. வேறென்ன சந்தேகம்?
முண்டாசு
முனுசாமி:
நீல நாக்கு நோய் வந்தா எப்படிக் கண்டுபிடிக்கிறதுங்கய்யா?
மருத்துவர் : இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகள்ல கடுமையான
காய்ச்சல் இருக்கும். மூக்குல பார்த்தோம்னா
தண்ணீர் மாறி சளி வடியும். ரெண்டு மூணு
நாள்ல சளி கட்டியா இருகி மூக்குத் துவாரங்களை அடைச்சிரும். அப்புறம் ஆடுங்க மூச்சு விடவே சிரமப்படும். வாயோட
உள்பகுதியில, நாக்குல, அப்புறம் ஈறுகள்லயும் புண்ணுங்க வரும் முனுசாமி. உதடு, காது
கழுத்துப் பகுதயில வீக்கம் தெரியும். நாக்கு நீல நிறமா மாறிடும். கால் குளம்போட மேல்பகுதிங்க சிவந்து இருக்கும். வலியும் இருப்பதால் ஆடுங்க நொண்டி,
நொண்டி நடக்கும் முனுசாமி. ஒரு சில ஆடுகளைப்
பார்த்தோம்னா கழுத்து ஒரு பக்கமா இழுத்த மாதிரி இருக்கும். என்ன முனுசாமி? நீல நாக்கு
நோய் வந்தால் ஆடுங்க எவ்வளவு கஷ்டபடுங்கன்னு புரியுதாப்பா?
முண்டாசு
முனுசாமி : புரியுதுங்கய்யா. மழைகாலத்துக்கு முன்னாடியே தடுப்பூசி போட்டுக்கிட்டா
நீல நாக்கு நோய் வராதுங்களா ஐயா?
மருத்துவர் : வராது முனுசாமி. மூன்று மாச வயசுக்கு மேல் உள்ள ஆடுகளுக்கு தடுப்பூசி
போடலாம். அதற்குப்புறம் வருசத்;துக்கு ஒரு
முறை மழை காலத்திற்கு முன்ன தவறாம தடுப்பூசி போடணும்.
(முனுசாமியும்,
ராக்கம்மாவும் தங்களுடைய ஆடுகளுக்குத் தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர்)
காட்சி – 3
இடம்: தேநீர்
கடை (சில மாதங்களுக்குப் பிறகு)
(பங்கு பெறுவோர்: முண்டாசு முனுசாமி, குப்புசாமி
)
முண்டாசு
முனுசாமி : என்னப்பா விவசாயிங்க
எல்லோரும் எங்க கூட்டமா போறீங்க?
குப்புசாமி
(கூட்டத்தல் ஒருவர்) : அத ஏன்ணே கேக்குறீங்க. நம்ம ஏகாம்பரம் ஆட்டு கொட்டாயில நிறைய ஆடுங்க இறந்து
போச்சாம். அதான் என்னா ஏதுன்னு பார்க்கப் போறோம்.
காட்சி – 4
இடம்: ஏட்டிக்குப்போட்டி
ஏகாம்பரம் கொட்டகை
(பங்கு பெறுவோர்:
முண்டாசு முனுசாமி, ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம்)
ஏ.போ.ஏகாம்பரம் : அய்யோ முனுசாமி நீ சொன்னத கேட்கமா போயிட்டனே.
என் ஆடுங்க எல்லாத்துக்கும் நீல நாக்கு நோய் வந்துடுச்சே. உம் பேச்சை கேட்காம விட்டுட்டனே. தடுப்பூசி போடாம
போயிட்டனே.
முண்டாசு
முனுசாமி : சரிப்பா சரி அழாத. இப்ப அழுது எண்ணத்த ஆகப் போகுது. டாக்டர கூப்பிடுவோம் வா.
காட்சி – 5
இடம்: முனுசாமி
கொட்டகை
(ஆறு மாதங்களுக்குப்
பிறகு – காலை நேரம்)
(பங்கு பெறுவோர்:
முண்டாசு முனுசாமி, ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம்)
ஏ.போ.ஏகாம்பரம் : என்னப்பா முனுசாமி. இன்னும் நீல நாக்கு நோய்க்கு தடுப்பூசி போட போகலையா.
முண்டாசு
முனுசாமி : சரிப்பா ஏகாம்பரம். நீ போயி உன் ஆட்டைல்லாம் ஓட்டிக்கிட்டு வா. மாட்டாஸ்பத்திரிக்கு போகலாம்.
ஏ.போ.ஏகாம்பரம் : அட போப்பா. போயி வேலைய பாரு. நாங்கலாம் கருநாக்கு
காரங்க. காலைலேயே போயி நீல நாக்கு நோய்க்கு
தடுப்பூசி போட்டுக்கிட்டு வந்துட்டுடேன்.
முண்டாசு
முனுசாமி : அடேங்கப்பா ஏகாம்பரம். எப்படியிருந்த நீ இப்படி மாறிட்டே. சரிப்பா, இதா நானும் போறேன்.
-- சுபம் --
No comments:
Post a Comment