Friday, June 14, 2019


ஆடுகளுக்கு மருந்துக் குளியல் - ஒரு உரையாடல்


ரா.கோபி, ந.விமல் ராஜ்குமார், பெரு.மதியழகன் மற்றும் பொ.திலகர்
கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-7.

காட்சி – 1
இடம்: குமாரின் ஆட்டுப் பண்ணை அருகில்
(பங்கு பெறுவோர்: குமார், செல்வம் மற்றும் ராஜா)
குமார்         : காசு பணம் துட்டு money money....காசு பணம் துட்டு money money (குமார்          பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கிறான்).
ராஜா          : குமாரு தம்பி குமாரு டேய் குமாரு டே.
குமார்         : காசு பணம் துட்டு money money...காசு பணம்...
ராஜா      : ஏம்பா செல்வம் இந்த குமாரு பையன் ஆட்டுப் பண்ணை வச்சாலும் வச்சான் அண்ணன் கூப்பிடுறது கூட தெரியாம ஆடிட்டே இருக்கான். அண்ணனுக்குன்னு ஒரு மரியாதையே இல்லையேடா.
செல்வம்    : அண்ணே அப்படிலாம் இல்லண்ணே. டேய் குமாரு அண்ணன் கூப்பிடறாருடா (சற்று அதட்டலாக).
குமார்        : அண்ணே மன்னிச்சுக்கண்ணே கவனிக்கல.
ராஜா          : சரி சரி காலைலேயே அண்ணனும் தம்பியும் எங்கடா கிளம்பிடீங்க?           
செல்வம்   : அண்ணே நேத்து குமாரு பையன,; மாட்டு டாக்டருகிட்ட ஆடுகளுக்கு ஏதோ மருந்துக் குளியல் பத்தி செயல்முறை விளக்கம் கத்துகிட்டு வந்திருக்கான்.  அதாண்ணே எங்க ஆடுங்களுக்கும் மருந்துக் குளியல் பண்ணலாம்னு போறோம்.
ராஜா          : குமாரு அதென்னடா ஆடுகளுக்கு மருந்துக் குளியல் அண்ணனுக்கு தெரியாம?
குமார்      : அண்ணே வீட்ல அண்ணி, நீங்கள்லாம் எதுக்குண்ணே தலைக்கு ஷாம்பூ, சீயக்காய் போட்டு குளிக்குறீங்க?
ராஜா            : தலைல பொடுகு பேண் எல்லாம் இல்லாம இருக்கிறதுக்குபா.
குமார்     : தலைல பேணு இந்தா என்னன்னே. அது ஒரு பக்கமா இருந்துட்டு போவட்டும்ணே.
ராஜா          : டேய் குமாரு தம்பி அண்ணன வச்சி காமடி கீமடி பண்ணலையே. அதுங்க நம்ம இரத்தத்தைலாம் உறிஞ்சிடும்பா. அப்புறம் அண்ணன் யுசஅள வத்திப்போய் ஒல்லிக்குச்சியா உன்ன மாரி ஆயிடுவன்டா.
குமார்         : அதேதான்னே. நம்ம ஆட்டுங்க மேல இருக்கிற பேணு, உண்ணி மாதிரி புற ஒட்டுண்ணியெல்லாம் ஆட்டோட இரத்தத்தை உறிஞ்சாம இருக்கிறதுக்குத் தான்னே மருந்துக் குளியல் பண்ண போறோம்.
ராஜா        : டேய் குமாரு நீ சான் பயன்னாலும் உடம்பெல்லாம் மூளடா. நீ கருப்புத் தங்கம்டா குமாரு.
குமார்             : அண்ணே எதுனா சொல்லுங்க. கலர பத்தி மட்டும் பேசாதீங்க.
ராஜா      :  சரி சரி விடுடா குமாரு. புற ஒட்டுண்ணிகளால ஆடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுடா குமாரு
குமார்       : அண்ணே புற ஒட்டுண்ணிகளான பேண்கள், உண்ணிகள், தௌளுப் பூச்சிகள் மற்றும் சிரங்குப் பூச்சிகள் எல்லாம் ஆட்டோட தோளில் ஒட்டிக் கொண்டிருக்கும்ணே. அதுங்க எல்லாம் ஆட்டோட இரத்தத்தை உறிஞ்சி நம்ம ஆடுங்களோட வளர்ச்சியைக் குறைச்சிடும்ணே. புற ஒட்டுண்ணிகளாள பாதிக்கப்பட்ட ஆடுங்க எல்லாம் சரியா தீனி மேயாம உடல் மெலிந்து எலும்பும் தோலுமா இருக்கும். ஆட்டோட உரோமம் மற்றும் தோல் பகுதிகலெல்லாம் மிருதுவா இல்லாம சொர சொரன்னு விறைச்ச மாதிரி  இருக்கும்ணே. ஆடுங்களோட கண்களிலிருந்து தண்ணி வடிஞ்சிக்கொன்டே இருக்கும்ணே. நம்ம ஆடுங்களோட தொண்டைப் பகுதி, கண்களுக்கு கீழ் பகுதி, வாலின் அடிப்பகுதியில பார்த்தோம்னா புற ஒட்டுண்ணிங்க இருக்கும். 
          புற ஒட்டுண்ணிங்க ஆடுகளோட இரத்தத்தை எல்லாம் உறிஞ்சி இரத்தசோகை நோயை உண்டாக்கும்ணே. புற ஒட்டுண்ணிகளால பெபிசியோசிஸ், தைலிரியோசிஸ் மற்றும் அனபிளாஸ்மோசிஸ் போன்ற கொடிய நோய்கள் நம்ம ஆடுங்களுக்கு வரும்ணே. இந்த நோய்களால காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு எல்லாம் வரும். காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி 42 டிகிரி செல்சியஸ் வரைக்கும் ஆடுங்களுக்கு காய்ச்சல் வரும்ணே. 
            புற ஒட்டுண்ணிகளால ஆடுங்க உடல் எடை குறைவதோடு மட்டுமில்லாம, கடைசியா ஆடுங்க இறந்தும் போய்டும்னே. அதுமட்டுமில்லாம, ஆட்டோட தோல் பகுதியில காயத்தை ஏற்படுத்தி எரிச்சலை உண்டாக்கும்ணே. ஆடுங்க எரிச்சல் தாங்க முடியாம ஆட்டு கொட்டகையோட சுவர்ல உறஞ்சி காயத்தை அதிகப்படுத்திக்கும்ணே. இந்த காயங்களில் ஈக்கள் மேகட்ஸ் அப்படின்ற புழுக்களை வச்சிடும்ணே. 
     புற ஒட்டுண்ணிகளால பாதிக்கப்பட்ட ஆடுங்க ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும்போது, புற ஒட்டுண்ணிங்க ஒரு ஆட்டிலிருந்து மற்றொரு ஆட்டிற்கு பரவும். புதியதாக சந்தையில் இருந்து வாங்கி வரப்பட்ட ஆடுகள் மூலமாகவே புற ஒட்டுண்ணிகள் பரவும். அதனால புதியதாக வாங்கும் ஆடுகளில் புற ஒட்டுண்ணிகள் தாக்கம் உள்ளதா என நன்கு பார்த்த பின்னரே நம்ம ஆட்டோட சேக்கனும்ணே. இது போன்ற பாதிப்புகலெல்லாம் வராம தடுப்பதுக்குத்தான் நாங்க முன்கூட்டியே மருந்துக்குளியல் பண்ணலாம்னு போறோம்ணே.
ராஜா          : சரி குமாரு. நம்ம டாக்டரு ஆடுகளுக்கு எப்படி மருந்து குளியல் பண்ணினாரு?
குமார்         : அண்ணே 9 அடி நீளமும், 3 அடி அகலமும், மூணு அடி உயரமும் இருந்த மருந்து குளியல் தொட்டியில ஆடுகள குளிக்க வைச்சாங்க.  நம்ம மாதிரி சிறுகுறு விவசாயிகளெல்லாம் 2 அடி  அகலமும், 3 அடி நீளமும், 21ஃ2 அடி உயரமும் கொண்ட சிமெண்ட் தொட்டியையோ, இல்ல பிளாஸ்டிக் தொட்டியையோ பயன்படுத்தலாம்ணே..
ராஜா           : அதெல்லாம் சரிடா. மருந்துக் குளியல் கலவைய எப்படி தயார் பண்றது?
குமார்       : அண்ணே அமிட்ரஸ், சைபர்மெத்ரின், டெல்டாமெத்ரின், மாலத்தையான்னு நிறைய பேர்ல மருந்து இருக்குனே. ஓவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு அளவில தண்ணீர்ல கலந்து மருந்து கலவைய தயார் பண்ணனும்ணே. உதாரணமா ஓரு லிட்டர் தண்ணியில ரெண்டு மில்லி லிட்டர் பியூட்டாக்ஸ் மருந்தை கலந்து கலவைய தயாரிக்கலாம். மருந்து கலவைய தயாரிப்பதற்கு முன்னாடி மாட்டு டாக்டருகிட்ட கலந்து ஆலோசிக்கனும்ணே.
ராஜா          : ஏம்பா செல்வம் அண்ணனுக்கு மூச்சு வாங்குது. உனக்கு ஏதாவது சந்தேகம்னா கேளுப்பா?
செல்வம்      : சரிடா குமாரு. எந்த நேரத்தில குளிக்க வைக்கனும், எந்தெந்த ஆடுங்கள குளிக்க வைக்கனும்னு ஏதாவது டாக்டரு சொன்னாரா?
குமார்    : அண்ணே ஆடுகளை குளிக்க வைக்கும் முன் ஆட்டோட மேல சாணம் ஒட்டிக்கொண்டிருந்தால் அவைகளை நீக்கிடனும். அதுமட்டுமில்லாம முடிங்கலெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து உருண்டை முடிச்சு மாதிரி இருந்தால் அவைகளை வெட்டிய பின்தான் குளிக்க வைக்கணும். ஆடுகளுக்கு மருந்துக் குளியல் செய்யுற அன்னைக்கு காலைல ஆடுகளுக்குத் தீவனம் கொடுக்கக் கூடாது.  ஆனால் நல்லா தண்ணீரை குடிக்க வச்சிடனும். அப்பொழுதுதான் ஆடுங்க மருந்து தண்ணிய குடிக்காதுங்க.  காலை 8 மணியிலருந்து 11 மணிக்குள்ள குளியல முடிச்சிடனும். அப்பதான் சாயங்காலத்துகுள்ள மருந்து தண்ணீ ஈரமில்லாமல் காயும். நன்கு வெயில் அடிக்கும் சமயத்தில் மருந்துக்குளியல் செய்ய வேண்டும்.
                              ஆடுகளை குளிக்க வைக்கும்போது ஆட்டோட வால் பகுதியை மருந்து நீரில நல்லா தாழ்த்தி தலைப்பகுதிய கொஞ்சம் உசத்தி குளிக்க வைக்கனும். ஏன்னா மருந்து தண்ணி ஆட்டோட மூக்கில ஏறிடக் கூடாது. சுமார் 1 நிமிசம் மருந்து தண்ணீர்ல ஆடுங்க இருக்கணும். ஆடுகளை தூக்கும் போது கழுத்துப் பகுதியல ஒரு கையும், தொடைப் பகுதியில ஒரு கையையும் வைச்சுதான் தூக்கணும்ணே. ஆட்டின் உரோமத்தை மட்டும் புடிச்சி தூக்கக் கூடாது
                        சினை ஆடுங்க, குட்டிங்க, நோயுற்ற ஆடுகளுக்கு மருந்து குளியல் வேண்டாம்.  அப்புறம் மழை காலத்திலேயும் வேண்டாம்னே. வருசத்திற்கு ரெண்டு முறை அதாவது ஏப்ரல்-மே மாதங்கள்ல ஒரு முறையும், ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள்ல ஒரு முறையும் மருந்து குளியல பண்ணலாம்ணே. கடைசியா குளியல் முடிஞ்சதும் மருந்து குளியல் தொட்டியில் உள்ள மருந்து நீரை பத்திரமாக அப்புறப்படுத்தனும்ணே.
ராஜா           : அருமைடா குமாரு.
செல்வம்   : குமாரு, நம்ம பட்டி பக்கம் புல்லட் சத்தம் கேட்குது. மாட்டு டாக்டர்தான்னு நினைக்கிறேன். ராஜாண்ணே நீங்களும் வரிங்களா?
ராஜா           :  வாப்பா போவோம்.


(கால்நடைக் கதிர், மாத இதழ்,  2018)

No comments:

Post a Comment