Friday, April 12, 2019



ஆட்டுக்குட்டி பராமரிப்பு முறைகள் (Goat Kids Care and Management) - ஒரு உரையாடல் 


இரா.கோபி, ந.சதிஸ் குமார், பெரு.மதியழகன் மற்றும் ந.விமல் ராஜ்குமார்
கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-7

காட்சி – 1
இடம்: இராசு விவசாயியின்  வீடு
(பங்கு பெறுவோர்: கோபால், கோமதி, வெள்ளையன் மற்றும் இராசு விவசாயி)

கோபால்  : வெள்ளையா ஐயா கிட்ட விளையாட்டுத்தனமா பேசக்கூடாது மரியாதையா பேசனும். சரியா?

வெள்ளையன் : மாமா இதென்ன கிரிக்கெட் கிரவுண்டா விளையாடறதுக்கு நீ போட்ட கோட்ட தாண்டி நான் ஒரு வார்த்த பேசமாட்டேன் மாமா.

கோமதி     : தம்பி நீ ரோடும் போட வேண்டாம் கோடும் போட வேண்டாம் செத்த அமைதியா இரு. மாமா கேட்டுப்பாரு.

வெள்ளையன் : சரிக்கா.

கோபால்         : ஐயா, ஐயா.

இராசு விவசாயி : யாரப்பா?

கோபால்         : ஐயா நான்தான் கோபால் வந்துருக்கேன்.

இராசு விவசாயி : வாப்பா கோபாலு. என்ன விசயம் எல்லாரும் குடும்பத்தோட வந்துருக்கிங்க.

கோபால் : ஐயா, மச்சான் ஆட்டுப்பண்ண வச்சிருக்கான். அவன் பட்டில ஆட்டுக்குட்டிங்க மட்டும் சரியா வளராம அடிக்கடி செத்து போயிடுதுங்களாம். அதனால குட்டிங்கள வளக்கறதப் பத்தி உங்ககிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தோம்.

இராசு விவசாயி : ஓ அதானா சங்கதி. சரி கோபாலு மாட்டு டாக்டரு எனக்குச் சொல்லிக் கொடுத்தத நான் உங்களுக்குச் சொல்றேன்?

கோமதி                   : சொல்லுங்க ஐயா.

இராசு விவசாயி : குட்டிங்கதான் பண்ணையோட எதிர்காலமே. அதனால குட்டிங்கள கண்ணுங் கருத்துமா பாத்துக்கணும். முதல்ல ஆடு குட்டி போட்டதும்  குட்டி மேல மெல்லிய சவ்வு முடியிருக்கும். தாய் ஆடு அத நக்கி சுத்தம் செஞ்சிடும். அப்படி இல்லன்னா, குட்டி மேல கொஞ்சம் உப்பையோ (அல்லது) தவிடையோ நாம தூவனும். அப்படி பண்ணிணோம்னா தாய் ஆடு அதோட நாக்கால சுத்தப் படுத்திடும். அப்படியும் இல்லன்னா நாம ஆட்டுக்குட்டியோட மூக்குத் துவாரத்தில இருக்கிற சளி போன்ற திரவத்தை எடுத்துடணும். அப்பதான் ஆட்டுக்குட்டி சிரமம் இல்லாம மூச்சிவிடும். என்னடா வெள்ளையா புரியுதா?



வெள்ளையன்  : புரியுதுங்க ஐயா.

இராசு விவசாயி : பாலு, குட்டிங்க பொறந்ததும் தொப்புள் கொடிய 2 செ.மீ நீளம் உட்டு ஒரு சுத்தமான நூலால கட்டணும். அப்புறமா அதுக்கு கீழ 1 செ.மீ உட்டு தொப்புள் கொடிய வெட்டிடணும். வெட்டுண இடத்தில புண் ஆவாம இருக்க டிஞ்சர் அயோடின் வச்சிட்டு வுவு தடுப்புசிய போடணும்.  குட்டி பொறந்த 15 ல்லயிருந்து 30 நிமிசத்துக்குள்ள நாம சீம்பால கொடுக்கணும். சீம்பால் குட்டியோட உடல்ல இருக்கிற மலத்தை வெளிய தள்ளும். சீம்பாலுக்கு மிகச்சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தி உண்டுடா கோபாலு. குட்டி பொறந்த முதல் 5 நாளைக்கு 300 மில்லி லிட்டர் பால் தினமும் கொடுக்கணும். அதாவது குட்டி தாய்கிட்ட ஒரு நாளைக்கு    4 ல்லயிருந்து 5 முறை பால்குடிக்கணும்.  சரியா.

வெள்ளையன்  : அப்புறமா பால் கொடுக்க வேண்டாமாங்கய்யா?

இராசு விவசாயி : அட மடையா. அப்புறமா ஒரு மாசம் வரைக்கும் குட்டிங்க உடல் உடையில ஆறுல ஒரு பங்கு அளவும், ரெண்டாவது மாசத்தில எட்டுல ஒரு பங்கும், மூனாவது மாசத்தில சராசரியா பண்ணிரெண்டுல ஒரு பங்கு அளவும் கொடுக்கணும். மூணு மாசம் முடிஞ்சதும் பால் கொடுக்கறத முழுசா நிறுத்திரனும். 90வது நாள்ல தாய்கிட்டருந்து குட்டிய பிரிச்சிடணும்.

கோபால்       : சரிங்க ஐயா தாய் ஆட்டுல பால் கம்மியா சுரந்தா என்ன பன்றது?

இராசு விவசாயி :   நல்ல கேள்விடா கோபலு 300 மில்லி லிட்டர் பால்ல ஒரு முட்டைய கலந்து கூடவே ½ லிட்டர் தண்ணிரையும் கொஞ்சம் விளக்கெண்ணெயும் சேர்த்து நாம செயற்கையா பால்ல தயாரிச்சி கொடுக்கலாம். அதுவும் இல்லன்னா மாட்டுப்பாலை நல்லா காய்ச்சி குட்டிங்களுக்குக் கொடுக்கலாம். அப்படியும் இல்லன்னா அரை லிட்டர் மாட்டுப் பால் கூட அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து குட்டிங்களுக்குக் கொடுக்கலாம்.




            குட்டி பிறந்த 15வது நாள்ல குட்றபுழு நீக்க மருந்து கொடுக்கணும்.  அப்புறமா ஒரு மாச இடைவெளியில தொடர்ந்து மூணு மாசத்துக்கு கொடுக்கணும். அதாவது 15வது நாள்ல ஒரு முறையும் 45வது நாள்ல ஒரு முறையும் 75வது நாள்ல ஒரு முறையும் 105வது நாள்ல ஒரு முறையும் மருந்து கொடுக்கனும். நான் என்னோட அனுபவத்தில டாக்டர கேட்காம குடற்புழு நீக்க மருந்து கொடுத்ததே கிடையாது. நீங்களும் டாக்டர கேட்காம கொடுக்கவே கூடாது.

கோமதி     : புரியுதுங்கய்யா குட்டிக்கு மருந்து கொடுக்கும் போது புரை ஏறாம எப்படிங்கய்யா கொடுக்கிறது?

இராசு விவசாயி : குட்டிய நல்லா புடிச்சிகிட்டுக் குட்டியோட தாடைக்கு அடிப்பகுதியில ஒரு கை வச்சி தலையத் தூக்கின மாதிரி பிடிக்கணும். அப்புறம் கட்ட விரல ஆட்டோட வாய்க்குள்ள வச்சி வாயத் திறந்து குடற்புழு நீக்க மருந்த புரை ஏறாத மாதிரி ஊத்தணும். குட்டி பொறந்து ரெண்டு வாரம் கழிச்சி நாம அடர்தீவனங்களைக் கொடுக்கலாம். முதல்ல கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கனும். அப்புறமா குட்டியோட உடல் எடையில 20ல்ல ஒரு பங்கு அடர்தீவனம் கொடுக்கனும். அதாவது 30 நாள்லயிருந்து 60 நாள் வரைக்கும் 50 கிராமும், 60 நாள்லயிருந்து 90 நாள் வரைக்கும் 100 கிராமும், 90 நாள்லயிருந்து 180 நாள் வரைக்கும் 150 கிராமும், 180 நாள்லயிருந்து 270 நாள் வரைக்கும் 200 கிராமும் அடர்தீவனம் கொடுக்கணும்.




   அடர்தீவனத்தில் புரதச்சத்து மற்றும் மாவுச்சத்துக்கள் அதிகமாகவும்,நார்ச்சத்த்து குறைவாகவும் இருக்கும்.புரதச்சத்து அதிகமுள்ள பிண்ணாக்கு வகைகளும், மாவுச்சத்து அதிகமாக உள்ள சோளம், மக்காச்சோளம், கோதுமை போன்ற தானியங்களும், கூடவே அரிசித்தவிடு அல்லது கோதுமைத்தவிடைச் சேர்த்து ரவை போல நன்கு அரைத்து தயாரிக்கப்படுவதே அடர்தீவனம் கோபாலு. நம்ம ஆட்டுக்குட்டிங்க கிராமங்களின் வரப்புகள் மற்றும் மேய்ச்சல் புறம்போக்குநிலங்களில் மேய்வதால் ஆட்டுக்குட்டிக்கு தேவையான புரதச்சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை. ஆகவே அதனால நம்மை மாதிரி விவசாயிங்க அடர்தீவனங்கள் மூலம் அச்சத்துக்களை குட்டிகளுக்கு கொடுக்கலாம். சாதாரணமாக குட்டிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதச்சத்துகளின் அளவானது 16 சதவீதம் இருக்கணும்டா கோபாலு.

    அடர்தீவனங்கள நாமளே தயாரிக்கலாம்டா. அதாவது 100 கிலோ அடர்தீவனம் தயாரிக்கணும்னா 42 கிலோ மக்காச்சோளமும், 30 கிலோ கடலைப் புண்ணாக்கும், 15 கிலோ கோதுமை தவிடும், 10 கிலோ அரிசி தவிடும், 2 கிலோ தாது உப்புக் கலவையும் கடைசியா உப்பு 1 கிலோவையும் கலந்து நல்லா அரைச்சி பயன்படுத்தலாம். ஒரு மாசம் கழிச்சி இளம் பசுந்தீவனங்கள கொடுக்கலாம். கூடவே லிவர் டானிக், கால்சியம் சத்து போன்ற மருந்துக்கள டாக்டர கேட்டு கொடுக்கலாம். ஆட்டுப்பண்ணைல தாதுப்புக் கட்டிகளை தொங்க விடணும். குட்டிகளுக்கு தடுப்பூசி கண்டிப்பா போடனும்.

கோபால்   : தடுப்பூசியா அது என்னங்கய்யா அத எப்படிங்கய்யா போடுறது.

இராசு விவசாயி : கோபாலு ஒரு சில நோய்ங்க வராம தடுக்க முன் கூட்டியே போடுறதுதான் தடுப்பூசி. குட்டி பொறந்ததும் வுவு தடுப்பூசியும்,  45 வது நாள்ல துள்ளுமாரி நோய் தடுப்பூசியும் போடனும். அப்புறம் 21 நாள் கழிச்சி அதாவது 66 வது நாள்ல திரும்பவும் துள்ளுமாரி நோய் தடுப்பூசிய போடனும். அப்புறமா 3 மாசம் கழிச்சி கோமாரி நோய்க்கான தடுப்பூசியும் (90 வது நாள்), 4 மாசம் கழிச்சி பி.பி.ஆர் தடுப்பூசியும் (120 வது நாள்), 5 மாசம் கழிச்சி அம்மை தடுப்பூசியும் (150 வது நாள்) போடனும்.

வெள்ளையன்  : குட்டிக்கு வேற ஏதாவது பிரச்சன வருமாங்க ஐயா.

இராசு விவசாயி : வெள்ளையா, குட்டிகளுக்கு குளிரும் வயித்துப்போக்கும் ஒத்துக்கவே ஒத்துக்காது. அதனால குளிர் காலத்துல ஆட்டுப்பட்டிய சுத்தியும் கோணிப் பையையோ, பாலித்தீன் பையையோ கட்டலாம். ரெண்டு மூணு மின் விளக்குகளையும் பட்டியில எரிய விடலாம். வயித்துப்போக்கு வந்தா உடனே டாக்டர பாக்கணும். அதே மாதிரி 3 மாசம் கழிச்சி தாய்கிட்டயிருந்து குட்டிய பிரிச்சிடனும். பண்ணையில கிடா குட்டிங்க அதிகமா இருந்துச்சின்னா 3 மாசம் முடிஞ்சதும் டாக்டர பாத்து ஆண்மை நீக்கம் செஞ்சிட்டா அந்த குட்டிங்களும் நல்லா வளந்து நமக்கு நெறய லாபம் கிடைக்கும். என்னப்பா புரியுதா?


கோமதி   : ரொம்ப நன்றிங்க ஐயா. இனிமே தம்பி நல்லா ஆடுங்கள வளர்ப்பான். நாங்க போயிட்டு வறோங்கய்யா.

இராசு விவசாயி : சரிமா கோமதி. எல்லோரும் நல்லபடியா போயிட்டு வாங்க.



(கால்நடைக் கதிர், மாத இதழ், ஜனவரி 2019, 38 (10))