அசோலா
மற்றும் ஊறுகாய் புல் - வறட்சி கால நிவாரணம்
ரா. கோபி மற்றும் அ. கோபி
உழவர்
பயிற்சி மையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் – 631 561
ரா. கோபி மற்றும் அ. கோபி
காட்சி - 1
இடம்: மாகறல் கால்நடை மருத்துவமனை, காஞ்சிபுரம்.
பங்கு பெறுவோர் : ராமசாமி, முருகன், விவசாயிகள் சங்க
குழுவினர் மற்றும் மாகறல் கால்நடை உதவி மருத்துவர்.
ராமசாமி :
வணக்கம் அய்யா
முருகன் : வணக்கம் அய்யா...எப்படி
இருக்கீங்க...
கா.உ. மருத்துவர் : வணக்கம் ராமசாமி. வாப்பா முருகா.
நல்லா இருக்கேன். நீங்கலாம் எப்படி இருக்கீங்க. முதல்ல எல்லோரும் உட்காருங்க உங்க ஆடு,
மாடுங்கல்லாம் எப்படிப்பா இருக்குங்க.
ராமசாமி : ரொம்ப
நன்றிங்கய்யா. நல்லா இருக்குங்க அய்யா.
ஒரு சில சந்தேகம்ங்க. அதான் உங்கள பார்த்து கேட்டுட்டு போலாம்னு வந்தோம்ங்கய்யா.
கா.உ.
மருத்துவர் : ம். சொல்லுப்பா
என்ன சந்தேகம் ? என்ன வேணும் ??
ராமசாமி : அய்யா
நம்ம முருகன் மொபைல்ல வாட்சப்ல்ல ஏதோ அசோலா மற்றும் ஊறுகாய் புல் அப்படின்னு வந்துதாம்.
நீங்கதான் வாட்சப்ல்ல வருகின்ற கால்நடைகள் சம்மந்தப்பட்ட தகவல்களை கால்நடை மருத்துவரை
ஆலோசிக்காமல் பயன்படுத்தக் கூடாதுன்னு கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்ட சொன்னிங்க. அதாங்க
அய்யா உங்ககிட்ட அசோலா மற்றும் ஊறுகாய் புல் பத்தி விளக்கமாக் கேட்டுட்டு போலாம்னு
வந்தோம்.
கா.உ.
மருத்துவர் : ரொம்ப
நல்லதுப்பா. சரிப்பா முதல்ல நாம அசோலா பத்தி பேசலாம்.
முருகன் :
சரிங்கய்யா கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க
கா.உ. மருத்துவர்: அசோலா அப்படின்றது பெரணி வகையைச்
சார்ந்த நீரில் மிதக்கும் தாவரமாகும். இத்தாவரத்தை மூக்குத்திச் செடி அப்படின்னு நம்ம ஊருல சொல்வாங்க
ராமசாமி :
அதென்னங்கய்யா மூக்குத்திச்செடி ???
கா.உ. மருத்துவர் : இந்தச்
செடியோட இலைகள் பார்ப்பதற்கு மூக்குத்தி மாதிரி மிகச்சிறிய அளவில பக்கவாட்டுல முக்கோண
வடிவில் ஒன்றின் மேல் ஒன்று எதிர் வரிசையில அடுக்கின மாதிரி இருக்கும். நீர்நிலை முழுவதும்
பச்சைப்பசேல்னு பச்சைக் கம்பளம் விரித்த மாதிரி இருக்கும் ராமசாமி.
முருகன் : இந்த
அசோலா தாவரத்தோட பயன்கள் என்னங்கய்யா ????
கா.உ. மருத்துவர் : இந்த
அசோலா தாவரத்தில் புரதச்சத்து 25-30 சதவீத அளவிலும், நார்ச்சத்து 14-15 சதவீத அளவிலும்,
கொழுப்புச்சத்து 3-4 சதவீத அளவிலும், சாம்பல்ச்சத்து 15-20 சதவீத அளவிலும் இருக்கும்.
இதுமட்டுமில்லாம கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மணிச்சத்து மற்றும்
சுண்ணாம்புச் சத்துக்களும் இருக்குதுப்பா முருகா. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒரு முறையும்
அசோலா இருமடங்காக வளரும் திறனுள்ள தாவரம். ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் 250-300 டன் அசோலாவை
ஒரு வருடத்திற்கு உற்பத்தி செய்யலாம். அதுமட்டுமில்லாம அசோலாவில் லிக்னின் அப்படின்ற
பொருள் குறைவா இருக்கிறதால நம்ம கால்நடைகள் எளிதில் சீரணித்து விடுங்க. அசோலாவை நெல்
வயல்களில் நீர் ஆவியாவதை தடுப்பதற்கும், காற்றில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
அதாவது ஒரு நாளைக்கு ஒரு ஹெக்டருக்கு 4 கிலோ தழைச்சத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தலாம்
முருகா. ஆடு, மாடு, கோழி போன்ற நம் கால்நடைகளுக்கும் அசோலாவை நன்கு அளிக்கலாம்.
முருகன் : நம்ம
கால்நடைகளுக்கு எந்த அளவுலங்கய்யா கொடுக்கிறது, பலன் கொடுக்கும்ங்களா?
கா.உ. மருத்துவர் : அசோலாவை
பசுந்தீவனமாகவோ, இல்ல காய வைத்து உலர் தீவனமாகவோ பயன்படுத்தலாம். கறவை மாடுகளுக்கு
1 - 1.50 கிலோ அளவிலும், ஆடுகளுக்கு 300 கிராம் அளவிலும், கோழிகளுக்கு 25-30 கிராம்
என்ற அளவிலும் கொடுக்கலாம். அசோலாவை மாடுகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தோம்னா
15-20 சதவீத பால் உற்பத்தியை அதிகரிக்கலாம். கோழிகளுக்கு கொடுக்கும்போது அசோலாவில்
உள்ள பீட்டா கரோட்டினால் முட்டையின் எடை சற்று கூடியும், மஞ்சள் கருவானது சற்று அடர்த்தியாகவும்
இருக்கும்பா குமாரு. ஒரு கிலோ அசோலாவானது ஒரு கிலோ பிண்ணாக்கில் உள்ள சத்துப் பொருட்களுக்கு
சமம் ராமசாமி. ஒரு கிலோ பிண்ணாக்கின் விலை சராசரியா 45 - 55 ரூபாய். ஆனா ஒரு கிலோ அசோலாவை
உற்பத்தி செய்ய 50 முதல் 75 பைசா மட்டுமே செலவாகும். அப்படின்னா அசோலாவோட முக்கியத்துவத்தை
புரிஞ்சிக்காங்கப்பா.
ராமசாமி : புரியுதுங்கய்யா...அப்படிப்பட்ட
அசோலாவை எப்படிங்கய்யா வளர்க்கிறது ?
கா.உ. மருத்துவர் : சரி
வா ராமசாமி. நம்ம கீழ்பேரமநல்லூரில் இருக்கிற குமரேசன் தோட்டத்துல அசோலாவை உற்பத்தி
செஞ்சிருக்கோம். வாங்க நாம அவர் தோட்டத்துக்கு போய் அசோலாவை நேரில் பார்த்துக்கொண்டே
பேசலாம்.
ராமசாமி : சரிங்க
அய்யா.
காட்சி - 2
இடம்: குமரேசன்
தோட்டம், கீழ்பேரமநல்லூர்.
பங்கு பெறுவோர் : குமரேசன்,
ராமசாமி, முருகன்,
விவசாயிகள் சங்க குழுவினர் மற்றும் மாகறல் கால்நடை உதவி மருத்துவர்.
குமரேசன் : சார்
வணக்கம். எப்படி இருக்கீங்க.
கா.உ. மருத்துவர் : வணக்கம்பா
குமரேசா. நல்லா இருக்கேன். நம்ம அசோலா இருக்கிற தொட்டிய பார்க்கலாம்னு வந்தோம்.
குமரேசன் : வாங்க
சார் பார்க்கலாம்.
கா.உ. மருத்துவர் : ராமசாமி
அசோலாவை நெல் வயல்களிலோ, சிமெண்ட் தொட்டியிலோ, இல்ல நம்ம குமரேசன் மாதிரி குழியிலியோ
நாம வளர்க்கலாம். முதல்ல 6 ஆடி நீளமும், 3 அடி அகலமும், 1 அடி ஆழமும் இருக்கிறமாதிரி
ஒரு பள்ளம் தோண்டிட்டு, அப்புறமா அந்த பள்ளத்தின் மேல சிலிப்பாலின் ஷீட்டையோ அல்லது
வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கிற பேனரைக் கூட குழியின் மேல் போடலாம். பின்னர் செங்கற்களை
குழியைச் சுற்றி வைக்கணும்பா. அப்புறமா அது மேல 30 கிலோ செம்மண்ணை சீராக போட்டு விட்டுட்டு, 3 கிலோ சாணத்தை கரைத்து ஊற்றணும். கடைசியா,
10 சென்டிமீட்டர் அளவு தண்ணீர் வரும் வரை 8-10 குடம் தண்ணீரை குழியில் ஊற்றி, 30 கிராம்
சூப்பர் பாஸ்பேட்டை குழியில் போடணும். ஒரு நாள் முழுவதும், அதாவது மண் மற்றும் சாணம்
சூடு தணியும் வரை அசோலாவை தொட்டியில் போடக் கூடாது. உடனடியா தொட்டியில் அசோலாவை போட்டால்,
சில சமயங்கள்ள மண் மற்றும் சாணத்தின் சூடு தாங்காம அசோலா காய்ந்து போய்டும். ஒரு நாள்
கழித்து, ஒரு கிலோ அசோலாவை குழியில் இட்டு, அது மேல கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து விடணும்
முருகா. இரண்டு வாரம் கழிச்சு பார்த்தோம்னா அசோலா நன்றாக வளர்ந்திருக்கும். அந்த குழியிலிருந்து
நாம தினமும் ஒரு கிலோ வரை அசோலாவை அறுவடை பண்ணலாம்.
நெல் வயல்ல வளர்க்கணும்னா, 5 சென்டிமீட்டர் அளவிற்கு
தண்ணீர் தேங்கியுள்ள 1 செண்ட் நெல் வயல்ல 5 கிலோ அசோலாவை தூவினா இரு வாரங்கள்ல அந்த
பகுதி முழுசா அசோலா வளர்ந்திடும்.
முருகன் : அப்படின்னா
நான் நாளையே மொட்டை மாடியில அசோலாவை வளர்கிறேனுங்கய்யா...
கா.உ. மருத்துவர் : முருகா
முதலுக்கே மோசமாகிடும்பா . அசோலா பராமரிப்பில இன்னும் சில முறைகள் இருக்கு. அதையும்
கேட்டுட்டு பண்ணுப்பா
முருகன் : மன்னிச்சிடுங்கய்யா
சொல்லுங்க.
கா.உ. மருத்துவர் : அசோலாவை
அதிக வெப்பமில்லாத, சூரிய ஒளி நேரடியாக படாத நிழலான இடமாக பார்த்து வளர்க்கணும். மர நிழலில் அசோலாவை வளர்க்கலாம். கோடை காலங்கள்ல வெயிலோட
தாக்கம் அடிக்காம பார்த்துக்கணும். நேரடியா சூரிய ஒளி அசோலா மேல பட்டுச்சுன்னா அசோலா
கருகிடும்பா. அதனால நிழல் வலைகளை அசோலா தொட்டி மேல கட்டி விடலாம். அசோலாவை ஆடு மாடுகளுக்கு
கொடுப்பதற்கு முன்னாடி சாணம் மணம் அடிக்காமல் இருக்க நன்கு சுத்தம் செய்துடணும். மழைக்காலங்கள்ல
சற்று சூரிய ஒளியில் உலர்த்தி கொடுக்கலாம். தினமும் வளர்ந்த அசோலாவை அறுவடை செய்திடணும்.
10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றணும். வாரம் ஒரு முறை 2 கிலோ
சாணத்தையும் 10 கிராம் கிராம் சூப்பர் பாஸ்பேட்டை குழியில் போடணும். மாதம் ஒரு முறை
மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றணும். முருகா நல்லா ஞாபகம் வச்சுக்கப்பா. ஒரு நாள் முழுவதும்,
அதாவது மண் மற்றும் சாணம் சூடு தணியும் வரை அசோலா தொட்டியில் போடக் கூடாது. மண் மற்றும்
சாணத்தை மற்றொரு குழியில் ஊற வைத்து பின்னர் தான், நம் அசோலா குழிக்குள் அவற்றை போட
வேண்டும். அசோலாவில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் அசோலாவை கால்நடைகளுக்கு அளிப்பதால்
நாம தீவனச் செலவை குறைக்கலாம் முருகா.
முருகன் : ரொம்ப
நன்றிங்கய்யா. ஊறுகாய் புல் உற்பத்தி பத்தி கொஞ்சம் சொல்லுங்கய்யா...
கா.உ. மருத்துவர் : நம்ம
ஊரில கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தி மழைக்காலங்கள்ள அதிகமாகவும், கோடை காலம் மற்றும் வறட்சி காலங்கள்ள மிகவும் குறைவாகவும் இருக்குது முருகா. வறட்சி காலங்கள்ல
நாம எப்பொழுதும் சோளத்தட்டை, வைக்கோல், உலர வைத்த கடலைச்செடி போன்றவைகளைத்தான் கொடுப்போம்.
இந்த தீவனங்களில் கால்நடைகளுக்கு போதுமான சத்துப் பொருட்கள் குறைவாக உள்ளதால், மாடுகளின்
வளர்ச்சியும், சினைப்பிடிக்கும் திறனும் வெகுவாக குறையும். தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால
நம்மால வேலிமசால், முயல்மசால் மற்றும் தட்டைப்பயறு போன்ற புரதம் அதிகமாக உள்ள பயறு
வகைகளையும் கால்நடைகளுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியுறதில்ல. இந்த மாதிரி வறட்சி
காலங்களில், குறிப்பா நம்ம கறவை மாடுகளுக்கு சரியான அளவில் பசுந்தீவனம் அளிக்காம போனோம்னா,
மாடுகளோட பால் உற்பத்தி மற்றும் சினைப் பிடிக்கும் திறன் குறையும். அதனால உங்கள போன்ற
ஆர்வமான விவசாயிங்க அசோலா மற்றும் ஊறுகாய் புல் போன்றவைகளை உற்பத்தி செய்து வறட்சி
காலத்தை சமாளிக்கலாம்.
குமரேசன் : புரியுதுங்கய்யா
?? அதென்னங்கய்யா ஊறுகாய் புல் ?
கா.உ. மருத்துவர் : குமரேசா
மழைக்காலத்தில அதிகமாகக் கிடைக்கும் பசுந்தீவனத்தை அதன் தன்மை மாறாம, குறைந்த அளவு
ஊட்டச்சத்து இழப்போட பதப்படுத்தும் முறைதான்
சைலேஜ் அப்படின்ற ஊறுகாய் புல் தயாரிப்பு முறை.
ராமசாமி : சரிங்கய்யா.
ஊறுகாய் புல் எப்படிங்கய்யா தயாரிக்கிறது ?
கா.உ. மருத்துவர் : ராமசாமி,
மக்காச்சோளம், சோளம் மற்றும் ஓட்ஸ் போன்ற தானிய வகைத் தீவனப்பயிர்களைப் பூ பூக்கும்
தருணத்திலும், கம்பு நேப்பியர் போன்ற ஒட்டுப் புல் வகைத் தீவனப்பயிர்களை 1.25 மீட்டர்
வளர்ந்த பின்பு அறுவடை செய்தும் ஊறுகாய் புல் தயாரிப்பிற்குப் பயன்படுத்தலாம். சைலேஜ்
தயாரிக்கத் தேவைப்படும் குழியை சைலோ குழி அப்படின்னு சொல்வாங்க.
சைலோ குழியைத் தண்ணீர் தேங்காத மேடான நிலப்பரப்பில்
அமைக்கணும். 1 மீட்டர் நீளம் * 1 மீட்டர் அகலம் * 1 மீட்டர் ஆழம் அளவுள்ள சைலோ குழியில்
500 - 600 கிலோ அளவுள்ள பசுந்தீவனங்களை நாம பதப்படுத்தலாம். சரியான தருணத்தில அறுவடை
செய்யப்பட்ட தீவனப்பயிர்களை 2 முதல் 3 மணி நேரம் அதாவது, 65-70 சதவீதம் அளவில் ஈரப்பதம்
வரும் வகையில் சூரிய ஒளியில் நல்லா உலர வைத்து, அப்புறமா சிறு சிறு துண்டுகளாக
(2-3 சென்டிமீட்டர்) நன்கு வெட்டணும் ராமசாமி. சைலோ குழியில் முதல்ல 5 சென்டிமீட்டர் அளவுக்கு வைக்கோலை பரப்பிட்டு,
அப்புறமா நறுக்கப்பட்ட தீவனப் பயிர்களை 100 கிலோ அளவில் சைலோ குழியில் இட வேண்டும்.
பின்னர் நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெளியேற்ற வேண்டும். பிறகு, அதன் மேல் 2 கிலோ
வெல்லப்பாகு மற்றும் 1 கிலோ உப்புக்கரைசலை பசுந்தீவனத்தின் மேல் தெளித்து விடணும்.
அப்புறம் மீண்டும் 100 கிலோ பசுந்தீவனம் மற்றும் வெல்லப்பாகு, உப்புக்கரைசலை அதன் மேல்
தெளிக்க வேண்டும். பின்னர் நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெளியேற்ற வேண்டும். சைலோ
குழியானது தரை மட்டத்திலிருந்து 1 - 1.5 மீட்டர் உயரம் வரும் வரை தீவனப்பயிர்களை அடுக்கணும். இதே போல்
500 கிலோ பசுந்தீவனத்தையும் முழுமையாக அடுக்கிய
பின்னர், இறுதியாக 5 சென்டிமீட்டர் அளவிற்கு வைக்கோலை வைத்துட்டு,
அதன் மேல ஈர மண்ணை வைத்து காற்று புகாமல்
45-60 நாட்கள் மூடி வைத்து நல்ல தரமான ஊறுகாய் புல்லைத் தயாரிக்கலாம். நல்ல தரமான ஊறுகாய் புல்லானது பழ
வாசனையுடன், பொன் மஞ்சள் நிறத்தில, 3.5 - 4.2 என்ற அளவில் அமிலத்தன்மையுடனும் இருக்கும்
ராமசாமி.
முருகன் : கால்நடைகளுக்கு
எவ்வளவு ஊறுகாய் புல்லை கொடுக்கலாம்ங்கய்யா?
கா.உ. மருத்துவர் : கறவை
மாடுகளுக்கு ஊறுகாய் புல்லை முதலில் 5 கிலோ அளவில் கொடுத்துப் பழக்கப்படுத்திய பின்னர்,
அதிகபட்சமாக 20 கிலோ வரை அளிக்கலாம். ஆடுகளுக்கு 1 கிலோ வரை ஊறுகாய் புல்லைக் கொடுக்கலாம்.
முருகன் : ரொம்ப நன்றிங்கய்யா...
ராமசாமி :
ரொம்ப நன்றிங்கய்யா... அப்ப நாங்க போயிட்டு
வறோம்ங்கய்யா...
கா.உ. மருத்துவர் : ரொம்ப
அருமை ராமசாமி. வாட்சப், யுடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்துல உலா வருகின்ற
கால்நடை சம்மந்தப்பட்ட தகவல்களை மருத்துவரோட ஆலோசனைகளை கேட்டுட்டு, அப்புறமா பயன்படுத்தணும்
அப்படினு நினைச்சுதுக்கே உங்களை பாராட்டணும். முருகா நீயும் ராமசாமி மாதிரி கத்துக்கப்பா...ஆடு
மாடுகளை நல்லா வளர்த்துங்கப்பா... ஏதாவது
சந்தேகம்னா வாங்கப்பா... போயிட்டு வாங்க.
கால்நடைக்
கதிர் (2019). 39(3), 31-38